Tuesday 28 November 2017

ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட சில டிப்ஸ்

ன்றைய இளைய தலைமுறையினர் அத்தியாவசிய தேவையான உணவை கூட மறந்து இருந்து விடுவார்கள், ஆனால் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு நொடி கூட இருக்க மாட்டார்கள். பொழுதுபோக்க சில வருடங்களுக்கு முன்பு  புத்தகங்கள், வானொலி, தொலைக்காட்சி, சினிமா என்று எத்தனையோ ஊடகங்கள் இருந்தது, ஆனால், ஸ்மார்ட்போன் (ஆப்ஸ்கள்) செயலிகள்  மூலம் படிக்கும் புத்தகத்திலிருந்து பார்க்கும் சினிமா, கேட்கும் வானொலி, செய்திகள், சமூக ஊடகங்கள், புகைப்படம் எடுக்க கேமரா என்று சகலத்தையும் ஒரு குடைக்குள் கொண்டிருப்பதால் இதன் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. பொழுதுபோக்க மட்டுமல்லாமல் பயணத்திற்கு டிக்கட் புக் செய்வது, ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவது என்று சுருக்கமாக சொல்வதென்றால் உலகை நம் உள்ளங்கைக்குள் அடக்கி கொடுத்து கொடுத்து நம்மை அதற்கு அடிமையாக்கி விடுகிறது. இந்த கட்டுப்பாடற்ற ஸ்மார்ட்போன் பயன்பாடு படிக்கும் மாணவர்களின் படிப்பையும், வேலைக்கு செல்பவர்களின் பணித்திறனையும், சில சமயங்களில் உறவுகளையும் கூட மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகிறது. 

இந்த ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட சில டிப்ஸ்:



* இந்த ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் முதலாவது நீங்கள் ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும், இதை தெரிந்து கொள்ள செக்கி போன்ற சில செயலிகள் உள்ளது. அவை நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை ஸ்மார்ட்போனை அன்லாக் செய்து உபயோகபடுத்தி இருக்கிறீர்கள் என்று துல்லியமாக காண்பித்து விடும். 



* ஒவ்வொரு முறையும் எவ்வளவு நேரம் ஸ்மார்ட்போனில் செலவிட்டீர்கள் என்று கணக்கிடுவதற்கும் மொமன்ட் போன்ற செயலி உள்ளது. இந்த செயலியில்  நீங்கள் ஒவ்வொரு முறையும்  10 நிமிடம் அல்லது 15 நிமிடம் மட்டுமே பயன்படுத்துவேன் என்றும், ஒரு நாளைக்கு மொத்தமாக அறுபது நிமிடங்கள் மட்டும் பயன்படுத்துவேன் என்றும் உறுதி எடுத்து கொண்டு அந்த கால அளவை இந்த செயலியில் சேமித்து வைத்து விட்டால், அந்த கால அளவு முடிந்தவுடன் உங்களுக்கு சிறு ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்கிறது இந்த செயலி. ஒரு முறை ஸ்மார்ட் போனை பயன்படுத்தும்போது கால அளவு கடந்துவிட்டால் நீங்கள் ஸ்மார்ட்போன் திரையை மூடும்போது எத்தனை நிமிடங்கள் அதிகமாக பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று அறிவிக்கவும் செய்கிறது. 

* முக்கியமான பேச்சுவார்த்தைகள், நண்பர்கள், உறவினர்களுடன் சந்திப்புகள் போன்ற நேரங்களில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதை தவிருங்கள். அது போன்ற நேரங்களில் ஸ்மார்ட் போனை சுவிட்ச் ஆப் செய்து விடுங்கள் அல்லது சைலன்ட் மோடில் வையுங்கள்.



* ஸ்மார்ட்போனில் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு செயலியும் (நோட்டிபிகேஷன்) அறிவிப்புகள் அனுப்புவதன் மூலம் உங்களை ஸ்மார்ட்போனை இடைவிடாமல் பயன்படுத்த செய்கின்றன.  செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று அவசியமற்ற செயலிகள் உங்களுக்கு (நோட்டிபிகேஷன்) அறிவிப்புகள் அனுப்புவதை ஆப் செய்யுங்கள். 



* சமூக ஊடகங்களில் நீங்கள் அதிக நேரத்தை வீணடித்து வந்தால் அந்த குறிப்பிட்ட சமூக ஊடகங்களை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு அல்லது ஒரு மாதத்துக்கு எதுவும் பதிவிட மாட்டேன், பயன்படுத்தவும் மாட்டேன் என்று உறுதி எடுத்து கொள்ளுங்கள். இத்தை செய்த பின்பு உங்களுக்கு எவ்வளவு நேரத்தை சமூக ஊடகங்களில் வீணாக்குகிறோம் என்பது புரிய வரும்.  

* மேலே சொல்லபட்டதை விட இப்போது கொடுக்கப்படும் ஆலோசனை மிக சிறந்தது. உங்களால் செய்ய முடியுமென்றால் உங்கள் நேரத்தை கொல்லும் சமூக ஊடக கணக்கை முழுமையாக (டீ ஆக்டிவேட்) அழித்து விடுங்கள்.  

* உங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க எதாவது ஒரு நல்ல விஷயத்தை கற்று கொள்ள துவங்குங்கள். தோட்டம் போடலாம், கைவினை பொருட்கள் செய்யலாம், இசை, நடனம் கற்று கொள்ளலாம்.   



* வெளியிடங்களுக்கு செல்லுபோது ஸ்மார்ட்போனை எடுத்து செல்லாமல் நல்ல புத்தகங்கள் அல்லது நாளிதழ்களை கொண்டு செல்லுங்கள், பயணத்தின் போது அல்லது காத்திருக்கும் நேரங்களில் புத்தகத்தை படிக்கலாம்.  



* உணவருந்தும் போது ஸ்மார்ட் போனை பார்த்து கொண்டே சாப்பிடாதீர்கள். உணவருந்தும் அறைக்கு ஸ்மார்ட்போனை எடுத்து செல்லாதீர்கள். 



* பணியிடங்களுக்கு ஸ்மார்ட்போன் கொண்டு செல்வதை தவிருங்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள்  ஸ்மார்ட்போன் கொண்டு செல்வதை தவிருங்கள்.

* தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.  



* தூங்கும் போது ஸ்மார்ட் போனை டூ நாட் டிஸ்டர்ப் மோடில் வைத்து விட்டு தூங்குங்கள். 

* பாத்ரூம், படுக்கை அறைக்கு ஸ்மார்ட்போனை கொண்டு செல்லாதீர்கள். 

* வேலையில் இருக்கும்போது ஸ்மார்ட்போனை டெஸ்கில் போட்டு மூடி விடுங்கள்.



* வாகனங்களை இயக்கும்போது ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.