Wednesday 6 December 2017

மலையை புரட்டிய தனி மனிதன் - தசரத் மாஞ்சி


ளைஞர் டைம்ஸில் ஏன் இந்த முதியவர் படம் என்ற கேள்வி உங்களுக்கு வருமென்றால், இந்த கட்டுரையை படித்து முடிக்கும் போது உங்களுக்கு பதில் கிடைத்து விடும்.  பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள கெலார் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர் தசரத் மாஞ்சி. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த தசரத் மாஞ்சி விவசாயக் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இவர் வாழ்ந்த சிற்றூர் ஒரு பெரும் மலையின் ஒரு புறத்தில் குடிசைகளில் வாழும் மக்களைக் கொண்டது, இந்த ஊரின் மக்கள் தங்கள் அடிப்படை தேவையான குடிநீர், மருத்துவமனை, கல்விக்கூடம், வேலை என்று எல்லா தேவைகளுக்கும் அந்த பெரு மலையை சுற்றி செல்ல வேண்டி வந்தது (கிட்டத்தட்ட எண்பது கிலோமீட்டர் பயணம்) இந்த மலைபயணத்தால் பலர் உயிரிழக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு வந்தது. 



1959 ஆம் ஆண்டு, தசரத் மாஞ்சி கூலி வேலைக்காக கிராமத்திலிருந்து மலையின் ஒரு புறத்திற்கு காலையில் புறப்பட்டு சென்று விடுவார்.  மதிய உணவு தயாரானதும் மான்ஜியின் மனைவி பல்குனி தேவி உணவை எடுத்து சென்று கணவருக்கு கொடுப்பதற்கு கரடுமுரடான மலைப்பாதையை கடந்து செல்ல வேண்டியதாய் இருந்தது. ஒரு நாள் கணவருக்கு உணவு எடுத்து செல்லும் போது மலைபகுதியில் நிலைதவறி விழுந்து ரத்தகாயங்களுடன் வந்த மனைவியை பார்த்த மாஞ்சி துடித்து போனார். அன்று முதல் அந்த மலையை தகர்த்து மலையின் மறுபுறம் செல்வதற்கு ஒரு பாதையை உருவாக்க வேண்டும் என்ற வெறி அவர் உள்ளத்தில் பிறந்தது. அதிகாலையில் எழுந்து சுத்தியலும் உளியும் எடுத்து கொண்டு மலைபாறைகளை உடைக்க கிளம்புவார், பொழுது விடிந்ததும் கூலி வேலைக்கு செல்வார், வேலை முடிந்து திரும்பி வந்ததும் மாலை பொழுதில் மீண்டும் மலைபாறைகளை உடைத்து பாதை அமைக்கும் பணியை செய்ய தனி ஒருவராக கிளம்பி விடுவார்.


ஒரு நாள் மாஞ்சியின் மனைவிக்கு உடல்நிலை மிக மோசமடைந்த போது அவரை அந்த மலையை சுற்றி மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பதற்க்குள் அவர் உயிரிழந்தார். தன் மனைவியை பறி கொடுத்த மாஞ்சிக்கு தன் மனைவியின் இறப்புக்கு காரணமான அந்த மலையை உடைத்து பாதையை உருவாக்கும் எண்ணம் நெருப்பாக பற்றி எரிய தொடங்கியது. மலையை உடைப்பதற்கு தேவையான சுத்தியல், உளி, என்று கருவிகள் வாங்குவதற்கு தான் வளர்த்து வந்த மூன்று, நான்கு ஆடுகளை விற்றிருக்கிறார் மாஞ்சி, முதலில் ஊரார் முதல் இவரது சொந்த அண்ணன் வரை எல்லோரும் (இவரது மலையை உடைத்து பாதை அமைக்கும் பணி) இவரை பைத்தியக்காரன் என்று எள்ளி நகையாடி உள்ளனர், ஆனால் சில வருடங்களில் இவர் கடும் உழைப்பின் பயனாக மலையில் சிறிதாக பாதை உருவாக துவங்கியதை பார்த்தவுடன் அந்த கிராம மக்கள் இவருக்கு உணவு கொடுத்து மலைபாறைகளை உடைப்பதற்கு கருவிகள் வாங்க பண உதவியும் செய்ய துவங்கினார். இதற்கிடையே மாஞ்சி கூலி வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டு முழு நேரமும் மலைப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட துவங்கினார். 



இயற்கைச் சீற்றங்கள், உடல் நலிவு என எத்தனையோ இன்னல்கள் வந்த போதும் மனம் தளராமல் 1959 முதல் 1981 வரை 22 வருடங்கள் கடுமையாக உழைத்து, 25 அடி உயரம், 30 அடி அகலம் 360 அடி நீளத்தில் பாதையை உருவாக்கினார். அதுவரை 80 கி.மீ மலையினைச் சுற்றிச் சென்றடைய வேண்டிய வசீரகஞ்ச் 13 கி.மீ தூரமானது. இதனால்  அந்த மலையைச் சுற்றி வாழ்ந்த 60 கிராம மக்களும் பயனடைய முடிந்தது.

மனைவி மீது கொண்ட காதலால் பேரரசன் ஷாஜகான் மும்தாஜுக்காக தாஜ்மகால் என்ற நினைவு சின்னம் எழுப்பியது போல் மாஞ்சி தன மனைவியின் நினைவாக இந்த மலைப்பாதையை உருவாக்கினார் என்று சிலர் நினைக்கின்றனர் ஆனால் மாஞ்சியோ மனைவியை இழந்த வேதனையால் இந்த பணியை துவக்கிய போதும் பின்னர் இந்த கிராம மக்கள் சரியான பாதையில்லாமல் படும் வேதனைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற நினைவே கடைசி வரை இந்த பணியை செய்து முடிக்க காரணமாய் இருந்தது என்கிறார். அதோடு ஆயிரக்கணக்கான மக்கள் கவலையின்றி இந்த மலையைக் கடந்து செல்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறும் மாஞ்சியின் பெயர் பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது, இந்திய அரசு  அவர் தனி ஆளாகத்தான் அந்த மலையைப் பிளந்தார் என்பதற்கு ஆதாரமில்லை என்று கூறிவிட்டது. ஆனால் அரசு விருது கொடுக்கும் என்பதற்காக நான் இதை செய்யவில்லை என்று கூறிய   மாஞ்சி பீகார் அரசு இவருக்கு இலவசமாக வழங்கிய ஐந்து ஏக்கர் நிலத்தை தனது கிராம மக்களுக்காக  அரசு மருத்துவமனை கட்டுவதற்காக வழங்கி விட்டார்.

தான் அமைத்த மலைப்பாதையில் அரசு சாலை போட்டு தனது ஊர் மக்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்று விரும்பினார், ஆனால் அவரது விருப்பம் நிறைவேறவில்லை. தனது வாழ்வின் இறுதி நாட்களில் புற்றுநோயோடு போராடிக் கொண்டிருந்தபோதுதான் அரசின் கருணை பார்வை இவர் மீது விழுந்தது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புற்று நோய்க்கான சிகிச்சை செலவை அரசு ஏற்பதாகக் கூறியது. ஆனால் நோயின் தீவிரம் காரணமாக 2007, ஆகஸ்ட் 18 அன்று மாஞ்சியின் உயிர் பிரிந்தது. ரயில் மூலம் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்ட மாஞ்சியின் உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தசரத் மான்ஜியின் கதை திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. 

வாழ்கையில் சின்ன சின்ன தோல்விகளை சந்திக்கும்போது தனி ஒருவனாக என்ன சாதித்து விட முடியும் என்று சோர்வடைந்து கேட்கும் சில இளைஞர்களுக்கு மாஞ்சி தன் வாழ்க்கையின் மூலம் தனி ஒரு மனிதனால் சமூகத்துக்கு பயன் தரும் எதையும் செய்ய முடியும் என்று சொல்லாமல் வாழ்ந்து காட்டி சென்றுள்ளார்.  
--------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்