Wednesday 1 November 2017

குடி கெடுக்கும் குடியிலிருந்து மீளும் வழிகள்

ம் நாட்டில் ஒவ்வொரு நாளும் குடிபழக்கத்துக்கு அடிமையாகி வாழ்கையை தொலைத்து கொண்டிருக்கும் குடிமகன்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.  குடிபழக்கத்துக்கு ஒரு குடும்ப தலைவன் அடிமையானால், சில வருடங்களில் அந்த குடும்ப தலைவனை காலனிடம் இழந்து அந்த குடும்பமே சிதைந்து போய் விடுகிறது. நம் நாட்டில் இந்த குடிபழக்கத்தால் சிதைந்து போன குடும்பங்கள் எத்தனையோ உண்டு.



படிப்பறிவற்ற, அன்றாடம் பிழைப்புக்காக கூலி வேலைக்கு செல்லும் மனிதர்களில் துவங்கி,  எம் என் சி கம்பெனிகளில் எட்டு இலக்க சம்பளம் வாங்கும் உயர் குடி மக்கள் வரை  தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை மது குடிக்க செலவிட்டு தங்கள் வாழ்கையை அழித்து கொள்வதோடு தங்களை நம்பியிருக்கும் குடும்பத்தையும் அழித்து விடுகின்றனர். குடி போதை மனிதனின் மதியை (அறிவை) மழுங்கடித்து விடுகிறது. தான் என்ன செய்கிறோம்? தான் செய்வது சரியா தவறா? என்று சிந்தித்து செயல்பட முடியாதபடி அவன் அறிவை அழித்து, உடலையும் அழித்து இறுதியில் உயிரையும் குடித்து விடுகிறது.  

குடிப்பதை ஒரு நாகரிக பழக்கம் என்று சொல்லி பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் இளைய தலைமுறையினர் நண்பனுக்கு பிறந்த நாள், தேர்வில் வெற்றி பெற்ற நாள் என்று சொல்லியும், அலுவலகங்களில் வேலைக்கு செல்வோர் அலுவலகத்தில் பார்ட்டி, நண்பனின் திருமண நாள் என்று சொல்லியும் குடிக்க துவங்கி படிப்படியாக இன்னிக்கு வேலையில் கொஞ்சம் டென்ஷன் அதனால் குடித்தேன், இன்னிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தேன் அதனால் குடித்தேன், இன்னிக்கு ரொம்ப கவலையோடு இருந்தேன் அதனால் குடித்தேன்.. என்று தினமும் குடிப்பதற்கு காரணம் சொல்ல தொடங்கி விடுகின்றனர். நாளடைவில் மதுவுக்கு  முழுவதும் அடிமையாகி மது இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆணுக்கு பெண்ணும் சமம் என்ற நிலை இன்று உலகமெங்கும் வந்துவிட்டதால் ஒரு சில பெண்களும் குடிபழக்கத்துக்கு அடிமையாகி அதிலிருத்து மீள முடியாமல் வாழ்கையை தொலைத்து உள்ளனர். 
   
மது குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் 



சில குடும்ப விருந்துகளில் மது குடித்த பின்பு மதியிழக்கும் குடிகாரர்களின் சேட்டைகள் வாய் சண்டையில் ஆரம்பித்து வெட்டு, குத்து வரை சென்று விடுகிறது.. இப்படி வாழ்வை அழிக்கும் குடி பழக்கத்திலிருந்து விடுபட சில டிப்ஸ்: 

* மனநல ஆலோசகரை தொடர்பு கொண்டு, அவரது ஆலோசனைகளை பின்பற்றுங்கள், இது குடியால் உங்களுக்கு ஏற்பட்ட உளவியல் மாற்றம் மற்றும் உணர்ச்சிவசப்படும் நிலைகளிலிருந்து உங்களை விடுவிக்கும்.

* குடியை விட ஒரு தேதியை தீர்மானம் செய்யுங்கள். இன்று முதல் குடிக்கமாட்டேன் என்று உங்கள் மனதுக்குள் தீர்மானம் செய்யுங்கள். நீண்ட நாள் அளவிலாமல் குடிப்பவராக இருந்தால் படிப்படியாக குடிப்பதை குறைக்கும் முயற்சிகளில் இறங்கலாம். 

* உங்கள் வீட்டில் குடிபழக்கத்தை நினைவூட்டும்படி காணப்படும் எல்லா வகையான பாட்டில்கள், கோப்பைகள், மது கிண்ணங்கள் போன்றவற்றை அப்புறப்படுத்துங்கள். 

*  நன்றாக உணவு அருந்துங்கள், வயிறு முட்ட உணவருந்திய பின்பு குடிக்க முடியாது, அப்படியே குடித்தாலும் ஏற்கனவே வயிறு நிறைந்திருப்பதால் நிறைய குடிக்க முடியாது. 

* குடிக்கும் எண்ணம் வரும்போது மதுவுக்கு பதிலாக பழச்சாறு அல்லது தண்ணீர் நிறைய குடிக்க துவங்குங்கள். 

* குடியினால் ஏற்படும் மனநல பாதிப்புகளை தடுக்கும் வைட்டமின் பி மாத்திரைகளை எடுத்து கொள்ளவும். 

* ஒரே நாளில் குடிபழக்கத்தை நிறுத்தி விட இயலாது. சிறிது சிறிதாக குடியை விட்டு விட முயற்சி செய்யுங்கள். 

* அதிகமாக குடிப்பதால் மனதுக்கு, உடலுக்கு ஏற்படும் தீங்குகளை (சிந்தனை தடுமாற்றம், கல்லீரல் பாதிப்பு) மனதில் நினைத்து பாருங்கள். குடிப்பதால் ஏற்படும் தீய விளைவுகளை நினைத்தாலே அந்த பழக்கத்திலிருந்து விடுபட தோன்றும் . 

* ஏற்கெனவே குடிபழக்கதில் சிக்கி அதிலிருந்து மீண்டு சிறப்பாக வாழ்ந்து வரும் மக்களை உங்களுக்கு நண்பர்களாக்கி கொள்ளுங்கள். அவர்கள் குடியிலிருந்து விடுபட எடுத்த முயற்சிகள், பயிற்சிகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். 

* நல்ல நட்பு உங்களை குடிபழக்கதில் இருந்து மீட்கும். நல்ல நட்பை ஏற்படுத்தி கொள்ளும் அதே நேரத்தில் குடிபழக்கத்தை நினைவூட்டும் தீய நட்பை உதறவும் மறக்க வேண்டாம். 

* குடிபழக்கதில் இருந்து மீள விரும்புபவர்கள் ஏதாவது ஒரு வேலை பார்க்க தொடங்குங்கள். சும்மா இருந்தால் மீண்டும் குடிக்கும் எண்ணங்கள் மனதில் தோன்றும். 

* குடும்பத்தோடு நிறைய நேரம் செலவிட துவங்குங்கள். குடும்பத்தினரை வெளியிடங்களுக்கு அழைத்து செல்வது, உறவினர்களை சந்திப்பது என்று எப்போதும் உங்களை பிஸியாக வைத்து கொள்ளுங்கள்

குடிபழக்கதில் இருந்து மீள விரும்புபவர்களுக்காக இரண்டு காணொளி காட்சிகள் பகிரப்பட்டுள்ளது, காணுங்கள் குடி பழக்கத்திலிருந்து விடுபட்டு புதிய  வாழ்கையை வாழ துவங்குங்கள். 

மது பழக்கம் நிறுத்தும் வழி 



குடியை மறக்க செய்ய வீட்டிலேயே இயற்கை மருத்துவம்

--------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்