Tuesday 19 December 2017

இளம் சாதனையாளர் - தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு


டந்த 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த மாற்று திறனாளிகளுக்கான கோடை கால பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் (டி-42 பிரிவில்) இந்தியாவுக்கு தங்க பதக்கம் வென்று தந்தவர் - மாரியப்பன் தங்கவேலு, சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தில் 28 ஜூன் 1995 ஆண்டு பிறந்தவர் மாரியப்பன் தங்கவேலு, இவரோடு கூட பிறந்தவர்கள் நான்கு அண்ணன்கள், ஒரு தங்கை. சிறு வயதிலேயே இவரது தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட, இவரது தாய் சரோஜா ஆறு பிள்ளைகளையும் ஆரம்ப நாட்களில் செங்கல் சுமக்கும் கூலி வேலைக்கு சென்றும், பின்னர் காய்கறி வியாபாரம் செய்தும் ஆறு பிள்ளைகளையும் வளர்த்து உள்ளார். மாரியப்பனுடைய  ஐந்தாவது வயதில் பள்ளிக்கு செல்லும்போது     மது     அருந்திவிட்டு     பேருந்தை      இயக்கிய    பேருந்து ஓட்டுனரால் நேர்ந்த விபத்தில் பேருந்து காலில் ஏறியதில் மாரியப்பன் முழங்காலுக்கு கீழுள்ள கால் பகுதி முழுவதும் சிதைந்து போனது. 



காலை இழந்தாலும் மனம் தளராத மாரியப்பன் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்தார், பள்ளியில் படிக்கும் காலத்திலேயே வாலிபால் விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வந்த இவரை இவரது விளையாட்டு பயிற்சி ஆசிரியர் உயரம் தாண்டுதல் போட்டியில் கவனம் செலுத்த கூறியுள்ளார், அவரது அறிவுரையை ஏற்று உயரம் தாண்டுதல் விளையாட்டில் கவனம் செலுத்த தொடங்கிய மாரியப்பன், தனது பதினான்காம் வயதில் மாவட்ட அளவில் நடந்த மாற்று திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது இவரது முதல் வெற்றி, தற்போது மாரியப்பனின் பயிற்சியாளராக இருந்து வரும் திரு. சத்யநாராயணா 2013 ஆம் ஆண்டு நடந்த தேசிய தடகள உயரம் தாண்டுதல் போட்டி ஒன்றில் மாரியப்பனின் ஆர்வத்தையும், திறமையையும் கண்டு மாரியப்பனுக்கு பயிற்சியளிக்க முடிவு செய்து அவரை தன் மாணவனாக சேர்த்து கொண்டார், பின்னர் 2015ஆம் ஆண்டு தொடர் பயிற்சிக்காக பெங்களுரு அழைத்து சென்றார்.


2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் துனிசியாவில் நடந்த ஐபிசி கிராண்ட் பிரீ போட்டியில் 1.78 மீட்டர்  தாண்டி ரியோ மாற்றுத் திறனாளிகளுக்கான  ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றார். பின்பு நடந்த மாற்று திறனாளிகளுக்கான கோடை கால பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் (டி-42 பிரிவில்) 1.89 மீ (6 அடி 2 இன்ச்) உயரம் தாண்டி  தங்கம் வென்ற இவருக்கு  அனைத்து தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தது, தங்கப் பதக்கம் வென்ற இவருக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 75 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கி கௌரவித்து உள்ளது. அத்துடன் தமிழக அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கியுள்ளது. விளையாட்டுத்துறையில் மாரியப்பன் தங்கவேலுவின் சாதனையை பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2017 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ பட்டமும், அதே ஆண்டில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதும் வழங்கி கவுரவித்தது. 

--------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்